டாக்கா: வங்கதேசத்தின் இடைக்கால அரசு ராணுவத்துடன் நல்லுறவை பேண வேண்டும் என, முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் போரில் பங்கேற்றோரின் வாரிசுகளுக்கு 30% அரசு வேலை இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இது இரண்டு தலைமுறைகளை கடந்தும் நீடித்ததால், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பலியாகினர்.

மக்கள் எழுச்சியாக மாறிய இந்த இயக்கத்தின் தாக்கத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாடு விட்டு வெளியேறினார். இதையடுத்து, 2024 ஆகஸ்ட் 5ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் காணாமல் ஆக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், ஹசீனாவைத் தவிர 16 ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரன்ட் பிறப்பித்தது.
அதில் 15 ராணுவ அதிகாரிகள் ராணுவ காவலில் வைக்கப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகள் சிவில் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்களா அல்லது ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால், இடைக்கால அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்ற நிலை உருவானது.
இந்த நிலையில், பி.என்.பி கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் சலாவுதீன் அகமது, யூனுஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ராணுவத்தை எதிரியாகக் கருதும் போக்கு நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும். வரவிருக்கும் தேர்தலுக்கு முன் அமைதியை பேணுவது அவசியம். ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டால், வீழ்த்தப்பட்ட சர்வாதிகாரிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அதைப் பயன்படுத்தி குழப்பத்தை உருவாக்குவர்” என அவர் தெரிவித்துள்ளார்.