உலகின் மிகப்பெரிய கத்தோலிக்க சமுதாயத்தின் ஆன்மிகத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்த நிலையில், அவர் அணிந்திருந்த ‘மீனவர் மோதிரம்’ உடைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு சாதாரண முடிவல்ல. இது திருச்சபையின் வரலாற்று மரபுகளுக்கு இணையான, ஆழமான ஆன்மீகப் பொருள் கொண்டது.

போப்புக்கு அதிகாரம் வழங்கும் அடையாளமாக இந்த மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மீனவராக இருந்த புனித பீட்டரின் வாரிசு என்பது இதன் அடிப்படை கருத்து. திருச்சபையின் முதன்மைத் துவக்கஸ்தராக கருதப்படும் பீட்டர் கடலில் படகு ஓட்டி வலையை வீசும் உருவத்தில் இந்த மோதிரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மனிதர்களை கடவுளின் பக்கம் இழுக்கும் ஆவிக்குரிய பணியை காட்டுகிறது.
போப் பிரான்சிஸ் இறந்துவிட்டதால், அவருடைய அதிகாரம் முடிவுக்கு வந்ததைக் குறிக்க இந்த மோதிரம் உடைக்கப்படுகிறது. இது ஒரு புதிய போப்பைத் தேர்வு செய்யும் முயற்சிக்கு அதிகாரபூர்வ தொடக்கம் என்றும் கருதப்படுகிறது.
போப்பின் மறைவுக்குப் பின்னால் அவரது சடங்குகள் முழுமையாக நிறைவேறும் வரை, திருச்சபையின் அதிகார செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். பின் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க கேர்டினல்கள் கூட்டம் ஒன்று கூடி வாக்கெடுப்பு நடத்தும். இந்த நிகழ்வுகளின் ஆரம்பத்தையே ‘மீனவர் மோதிரம்’ உடைக்கும் நிகழ்வு குறிக்கிறது.
போப்பின் சாவு மட்டுமல்ல, அவருடைய ஆன்மிகப் பயணத்தின் முடிவையும் குறிக்கும் இந்த செயல்முறை, கத்தோலிக்க உலகில் மிகவும் பரிசுத்தமான ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறது.