தைபே: தைவானில் நேற்று சக்திவாய்ந்த புயல் கரையை கடந்தது, பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசியது. இதனால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,600 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான தைவானில் நேற்று சக்திவாய்ந்த புயல் கரையை கடந்தது. இதையொட்டி பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 184 கிமீ வேகத்தில் வீசிய ‘காங்ரே’ என்று பெயரிடப்பட்ட புயல், டைடுங் பகுதியில் கரையைக் கடந்தபோது மணிக்கு 227 கிமீ வேகத்தில் அதிகரித்தது.
இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. தைவானில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான சூறாவளி இது என்று நம்பப்படுகிறது. புயல் காரணமாக நேற்று இலான் மற்றும் ஹுவாலியன் மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் பயிர்கள் சேதமடைந்தன. புயலில் சிக்கி 27 பேர் காயமடைந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தலைநகர் தைபே கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,600 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் மற்றும் கனமழை காரணமாக தைவான் முழுவதும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.