புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்த பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்த நிலையில், இந்தியாவில் பணியமர்த்துவதற்கான விளம்பரத்தை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும், அதிக இறக்குமதி வரிகள் மற்றும் பிற காரணங்களால் டெஸ்லா தயங்குகிறது.
இந்நிலையில், 40,000 டாலர்களுக்கு மேல் விலையுள்ள உயர் ரக சொகுசு கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை 110% லிருந்து 70% ஆக இந்திய அரசு குறைத்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் சந்தித்து பேசினார். இந்நிலையில், இந்தியாவில் ஆட்களை பணியமர்த்துவதற்கான விளம்பரத்தை டெஸ்லா நிறுவனம் தனது LinkedIn பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டது.
13 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் டெல்லி மற்றும் மும்பைக்கு டெக்னீஷியன் உட்பட 5 பணியிடங்கள் தேவை. மும்பைக்கு மேலாளர், விநியோக அதிகாரி உள்ளிட்ட பிற பணியிடங்கள் தேவை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் எலோன் மஸ்க் முக்கிய பதவியை (DOGE) வகிக்கிறார். இந்நிலையில் எலான் மஸ்க் பிரதமர் மோடியை தனியார் நிறுவன சிஇஓவாக சந்தித்தாரா அல்லது அரசு தரப்பில் சந்தித்தாரா என்பது தெரியவில்லை.