பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுாசிஸ்தான் மாகாணத்தில், தனி நாடு கோரிக்கையுடன் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பலுாசிஸ்தான் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது பலுாச் விடுதலை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களுக்குள் பாகிஸ்தான் ராணுவம் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.
சமீபத்தில் பலுாசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கும் கிளர்ச்சி நடவடிக்கையும் அங்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த போது, பலுாச் கிளர்ச்சியாளர்கள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட பதில்தாக்குதலின் போது, பலுாசிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திரளான ஆதரவு பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பலுாச் மக்கள் மற்றும் அவர்களது கிளர்ச்சி இயக்கங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரத அரசுக்கும் துணை நிற்கும் வகையில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
பலுாச் கிளர்ச்சியாளர் மீர் யார் என்பவர் வெளியிட்ட சமீபத்திய ஒரு பதிவில், “பலுாசிஸ்தான் மக்கள் பாரத மக்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றனர். பாகிஸ்தானுக்கு சீனா உதவுகின்றது என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் பலுாசிஸ்தானும், அதன் மக்கள் அனைவரும் பாரத அரசுக்கு பக்கமாக நிற்கிறோம்,” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “பிரதமர் மோடிக்கு நாங்கள் சொல்வது ஒன்றே: நீங்கள் தனியாக இல்லை. ஆறுகோடி பலுாச் தேசபக்தர்களின் உறுதியான ஆதரவு உங்களுடன் உள்ளது,” எனத் தெரிவித்தார்.
அத்துடன், “ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டை பலுாசிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது. சர்வதேச நாடுகள் உடனடியாக பாகிஸ்தானை காஷ்மீரிலிருந்து விலக வலியுறுத்த வேண்டும்,” எனவும் கூறினார்.
“இல்லையெனில், 1971 ஆம் ஆண்டு டாக்காவில் 93,000 பாகிஸ்தான் படையினர் சரணடைந்த அவமானம், பாகிஸ்தானை மீண்டும் ஒரு முறை தாக்கும்,” என்றார்.
பலுாச் மக்களின் இந்த வெளிப்படை ஆதரவு, இந்தியா-பாகிஸ்தான் உறவுகளிலும், சர்வதேச அரசியல் சூழலிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த தாக்கம், பலுாசிஸ்தான் விடுதலை இயக்கத்திற்கும், இந்தியாவின் காஷ்மீர் தொடர்பான நிலைப்பாட்டிற்கும் இடையே புதிய ரீதியான ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.