புதுடெல்லி: கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் வெள்ளிக்கிழமை கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸுடன் தொலைபேசியில் ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினேன். இந்தியா மற்றும் கிரீஸ் இடையேயான உறவை வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டோம். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே கடல், ரயில் மற்றும் சாலை வழியாக 6,000 கி.மீ. தொலை இணைப்பு நிறுவப்படுகிறது.
இதில் 3,500 கி.மீ. ஒரு கடல் வழி. தற்போது இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல 36 நாட்கள் ஆகிறது. புதிய வழித்தடத்தின் மூலம் இந்திய சரக்குகளை 14 நாட்களுக்கு முன்னதாகவே ஐரோப்பாவுக்கு கொண்டு செல்ல முடியும்.
இந்தத் திட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியப் பொருட்களுக்கான நுழைவுப் புள்ளியாக கிரீஸ் இருக்கும். கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார். அப்போது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போதைய தொலைபேசி உரையாடலில் இந்தியா மற்றும் கிரீஸ் பிரதமர்கள் திட்டம் குறித்து விரிவாக விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.