வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. வாஷிங்டன், நியூயார்க், சிக்காகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கினர். “இங்கு யாரும் மன்னர் இல்லை” என்ற கோஷங்களுடன் அவர்கள் டிரம்ப் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பினர்.

அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப் அரசின் பொருளாதார கொள்கைகளில் பல மாற்றங்களை செய்தார். அமெரிக்க தயாரிப்புகளைப் பாதுகாக்க வெளிநாட்டு வர்த்தகத்தில் கடும் வரிகளை விதித்ததோடு, அரசு ஊழியர்களை எளிதில் பணி நீக்கம் செய்யும் சட்டங்களை வலுப்படுத்தினார். மேலும், சட்டவிரோத குடியேற்றங்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை போன்ற முடிவுகளும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தின.
அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 2,500க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள், மாணவர் குழுக்கள் கலந்து கொண்டனர். வடக்கு வர்ஜீனியாவில் நடந்த பேரணியில் பெர்னி சாண்டர்ஸ், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். சில நகரங்களில் போலீசார் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், “இந்த போராட்டங்கள் அர்த்தமற்றவை. நான் மன்னர் அல்ல, அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவுகளை எடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதேவேளை, குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். ஜனநாயகக் கட்சி போராட்டக்காரர்களை அமைதியாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.