மாஸ்கோ: “பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்துங்கள்; இல்லையெனில், ஆயுத பலத்தால் முடிவுக்கு கொண்டு வருவோம்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022ல் தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் போர் இன்னும் நீடிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில், புடின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: “தூதரக வழியே சமாதான தீர்வை விரும்புகிறோம். ஆனால், தேவைப்பட்டால் போரின் மூலம் தீர்க்கவும் தயாராக உள்ளோம். ஜெலன்ஸ்கி மாஸ்கோவில் வருவாரானால் மட்டுமே நேரடிப் பேச்சு சாத்தியம்” என்றார்.

ஆனால், உக்ரைன் அதனை நிராகரித்து, நடுநிலை நாடுகளில் மட்டுமே உரையாட தயாராக இருப்பதாக தெரிவித்தது. மேலும், “ரஷ்யா தன் ஆக்கிரமிப்பை நிறுத்தாத வரை அர்த்தமுள்ள அமைதி பேச்சு சாத்தியமில்லை” என்று உக்ரைன் வெளியுறவுத்துறை கடுமையாக பதிலளித்தது.
புடின், உக்ரைன் ‘நேட்டோ’வில் சேரும் எண்ணத்தை கைவிட வேண்டும், டான்பாஸ் பிராந்தியம் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேவேளை, ஐரோப்பிய யூனியன் போர் முடிந்த பின் உக்ரைனில் பாதுகாப்புக்காக வெளிநாட்டு படைகளை அனுப்பும் திட்டம் வகுக்கிறது. அதற்கு ரஷ்ய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது.
சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், புடின் பிரதமர் மோடியை தனது சொகுசு காரில் அழைத்து சென்றதும், இருவரும் 45 நிமிடங்கள் காரிலேயே உரையாடியதும் குறிப்பிடத்தக்கது. “எந்த ரகசியமும் இல்லை; டிரம்புடன் அலாஸ்காவில் நடந்த பேச்சை மோடிக்கு விளக்கினேன்” என்று புடின் விளக்கம் அளித்தார்.