இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், கூகுள் எங்கள் தினசரி வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இணைய தேடலின் அடையாளமாகவே கூகுள் கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கூகுளின் முக்கியத்துவம் சிறிதும் குறையவில்லை. மக்கள் அங்கு எந்த விஷயங்களை தேடுகிறார்கள் என்பது சுவாரஸ்யமாக மாறியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, உலகம் முழுவதும் அதிகம் கேட்கப்பட்ட 100 கேள்விகளில் முதலிடம் பிடித்திருப்பது “What to Watch” என்பதே. மாதந்தோறும் 62 லட்சத்திற்கும் மேலானோர் இந்த கேள்வியை கூகுளில் கேட்கிறார்கள். புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றை அறிந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பரிந்துரைகள் கிடைக்கின்றன.
அதேபோல் “Where’s my refund” எனும் கேள்வி மாதந்தோறும் 34 லட்சத்திற்கும் மேலாக தேடப்படுகிறது. வருமான வரி ரீஃபண்ட் நிலை தெரிந்து கொள்ளவும், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர் பணம் திரும்ப கிடைக்கிறதா என்பதை அறியவும் இந்த தேடல் அதிகம் வருகிறது. இதன் பின்பு “What is my IP”, “Where is my train” போன்ற கேள்விகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் பயணிகள் ரயில் சேவைகளைப் பற்றிய தகவல்களை கூகுளில் அறிந்து கொள்கிறார்கள்.
மேலும் “How many days until Christmas” எனும் கேள்வியும் பிரபலமானதே. பண்டிகைக்கு எத்தனை நாட்கள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு கொண்டாட்டத்திற்கான திட்டங்களை மக்கள் வகுக்கிறார்கள். அதேசமயம் “What time is it” என நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கும் மாதந்தோறும் 14 லட்சத்திற்கும் மேலானோர் கூகுளைப் பயன்படுத்துவது ஆச்சரியமாக உள்ளது. இத்தகைய கேள்விகள், உலக மக்களின் தினசரி பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகின்றன.