ஹாங்காங் நோக்கி வேகமாக நகரும் ரகாசா சூறாவளி காரணமாக அங்கு பரபரப்பு நிலவுகிறது. தற்போது பிலிப்பைன்ஸ் லுசோன் தீவின் வடகிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சூறாவளி, தென் சீனக் கடலில் நுழைந்து சீனாவின் தெற்கு கடற்கரை பகுதிகளுக்கு நகரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 202 முதல் 221 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், புயல் மேற்கு–வடமேற்கு திசையில் மணிக்கு 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

புயலின் கடுமை காரணமாக ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில் செப்டம்பர் 23 மாலை 6 மணி முதல் செப்டம்பர் 25 காலை 6 மணி வரை, மொத்தம் 36 மணி நேரத்திற்கு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து புயலின் நகர்வை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவில் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படேன்ஸ் மற்றும் பாபுயன் தீவுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரகாசா சூறாவளி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தென்கிழக்காசிய நாடுகள் அதிக எச்சரிக்கை நிலையிலேயே உள்ளன. ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து அரசுகள் அவசர மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன. இந்த சூறாவளி தாக்கம் அப்பகுதி நாடுகளின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.