புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டிப்பதால் வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தியர்களும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள தயார் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்கள், இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை அளித்தால், அவர்கள் மீண்டும் நம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவர். ஏனெனில் இந்தியா சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரானது. சட்டவிரோத குடியேற்றம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்துடன் தொடர்புடையது.
“எனவே, இந்திய குடிமக்கள், அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ, முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு நாட்டில் தங்கியிருந்தால் அல்லது அங்கு வசிப்பவர்களாக இருந்தால், அவர்களின் குடியுரிமையை சரிபார்க்க தேவையான ஆவணங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால், நாங்கள் அவர்களை மீண்டும் கொண்டு வருவோம். சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் கடத்தல் இரண்டு தனித்தனியான பிரச்சினைகள் சட்டவிரோத இடம்பெயர்வு பற்றிய எங்கள் அணுகுமுறை, கொள்கை மற்றும் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது,” என்று அவர் கூறினார்.