போலந்தின் வான்வெளியில் நுழைந்த ரஷ்யா டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தாக்குதல் திட்டமிட்டதாக போலந்து குற்றம் சாட்டினாலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது தவறுதலாக நடந்திருக்கலாம் என்ற கூற்றை முன்வைத்துள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போர் பரவலாகி, யூரோப்பின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், போலந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ரபேல் ஜெட் விமானங்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். அவர், யூரோப்பின் பாதுகாப்பு எங்கள் முக்கிய முன்னுரிமை என வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், போலந்தின் துணைப் பிரதமர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, ரஷ்யா வேண்டுமென்றே இதைச் செய்துள்ளது என கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், “இரண்டாம் உலகப்போருக்குப் பின் இதுபோன்ற ஆபத்தான நிலைமையை நாம் எதிர்கொள்ளவில்லை” என எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக போர் உருவாகும் அபாயம் குறித்து அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். போலந்தில் மக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவுகிறது.
நிருபர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “போலந்தில் நடந்த டிரோன் தாக்குதல் எனக்கு கவலை அளிக்கிறது. அது விரைவில் முடிவடையும் என்று நம்புகிறேன். இது தவறுதலாக நடந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார். அவரது கருத்து, ரஷ்யா-உக்ரைன் போரின் அடுத்த கட்ட நிலைமையைப் பற்றி சர்வதேச அளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.