கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் உறுதி செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான குசும் நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய வர்த்தக நிறுவனங்களை வேண்டுமென்றே ரஷ்யா குறிவைக்கிறது.
அந்த வகையில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான குசும் நிறுவனத்தின் உக்ரைன் கிடங்கு மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சிறப்பான நட்புறவைக் கொண்டிருப்பதாகக் கூறும் ரஷ்யா, வேண்டுமென்றே இந்திய வணிகங்களைக் குறிவைக்கிறது. அந்தக் கிடங்கில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் இருந்தன.

அந்த மருந்துகள் தற்போது அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கான பிரிட்டிஷ் தூதர் மார்ட்டின் ஹாரிஸ், கியேவில் உள்ள ஒரு பெரிய மருந்து நிறுவனக் கிடங்கு ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், தாக்குதல் ரஷ்ய ட்ரோன்களால் (ஆளில்லா வான்வழி வாகனங்கள்) நடத்தப்பட்டது, ஏவுகணைகள் அல்ல என்று அவர் கூறுகிறார். கடந்த சில நாட்களில் ரஷ்ய எரிசக்தி நிறுவனங்கள் மீது உக்ரைன் ஐந்து தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்திய தொழிலதிபர் ராஜீவ் குப்தாவுக்கு சொந்தமான குசும் உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும். இது அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதால், நிறுவனத்தின் தயாரிப்புகள் உக்ரைன் முழுவதும் கிடைக்கின்றன. இந்த விவகாரம் குறித்து இந்திய அரசோ, ரஷ்யாவோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.