மாஸ்கோ: “ரஷ்யா – இந்தியா: புதிய இருதரப்புக் கொள்கை” என்ற தலைப்பில் ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சில் (RIAC) ஆதரவின் கீழ் ஒரு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்கிறார். பின்னர், தொலைக்காட்சியில் அவர் பேசியதாவது:-
இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நரேந்திர மோடி முதல்முறையாக ரஷ்யா சென்றார். அப்போது, அதிபர் புதினை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பயணத்தின் போது, இரு தலைவர்களும் “புதிய பொருளாதார நிகழ்ச்சி நிரல் – 2030” குறித்து விரிவான விவாதங்களை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 60 பில்லியன் டாலர்களாக உள்ளது. சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கு கடல்வழி வர்த்தகப் பாதையை செயல்படுத்துவதில் இரு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். எனினும், அதிபர் புதினின் இந்தியப் பயணத்தின் தேதி மற்றும் மாதம் குறித்த தகவலை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவிக்கவில்லை.