புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அதிபர் புதினை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ரஷ்ய-இந்திய தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சந்திப்பது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்படி. இந்த ஆண்டில் மட்டும் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்து, ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளினின் உதவியாளர் யூரி உஷாகோவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அதிபர் புதின் இந்தியா வர உள்ளார். இந்த வருகை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கும். அதற்கான தேதிகளை இந்திய அரசு முடிவு செய்யும். இரு நாட்டு தலைவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை நேரில் சந்தித்து பேசுவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றார்.