வாஷிங்டன்: உக்ரைனில் தொடர்ந்து டிரோன் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவின் ஒரு டிரோன் போலந்து வான்வெளிக்குள் நுழைந்தது. அதனை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம், நாட்டு பாதுகாப்பில் பெரும் சவாலாக கருதப்பட்டது.
போலந்து வான்வெளியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மூன்று ரபேல் ஜெட் விமானங்களை அங்கு நிறுத்த உத்தரவிட்டார். “ஐரோப்பாவின் பாதுகாப்பு எங்கள் முதன்மை. ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்” என அவர் வலியுறுத்தினார். இதே நேரத்தில், போலந்தின் துணைப் பிரதமர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, “இது ரஷ்யாவின் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்” என குற்றம் சாட்டினார்.

போலந்து பார்லிமென்டில் பிரதமர் டொனால்ட் டஸ்க், “நாடு நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இத்தகைய ஆபத்தான நிலைமை ஏற்பட்டதே இல்லை” என எச்சரித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம், “போலந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடந்திருப்பது வருந்தத்தக்கது. ஆனால் அது தவறுதலாக நடந்திருக்கலாம். விரைவில் இது முடிவுக்கு வரும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து உலக அளவில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.