தியான்ஜின்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பிரகடனம் கடுமையாக கண்டித்துள்ளது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த சூழலில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜினில் நடைபெறுகிறது. இன்று, மாநாட்டின் இரண்டாவது நாளில், மாநாட்டின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. அந்த அறிவிப்பில், “ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உறுப்பு நாடுகள் தங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.” தியான்ஜின் பிரகடனம் எல்லை தாண்டிய ஊடுருவலை முடிவுக்குக் கொண்டுவரவும் அழைப்பு விடுத்தது.
அதேபோல், பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான பயங்கரவாதத் தாக்குதலையும் அது கண்டித்தது. 10 உறுப்பினர்களைக் கொண்ட எஸ்சிஓவில் பாகிஸ்தானும் உறுப்பினராக உள்ளது. முன்னதாக, எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் குறித்த எந்த இரட்டை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், சில நாடுகள் வெளிப்படையாக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.