ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தபால் சேவையை தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. கடந்த 1999 முதல் 2015 முடிய, தபால் துறையின் சேமிப்பு கணக்குகளில் பெரிய அளவிலான மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக பலர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த ஆண்டுகளில் பல தொழிலாளர்கள் வேலை இழந்து, சிலர் நீதிமன்ற வழக்குகளையும் சந்திக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டனர்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இருந்த காரணம் சாதாரண மனித தவறு அல்ல, ஒரு கணினி மென்பொருளின் பிழையாக இருப்பது தெரியவந்தது. அதாவது, தவறான கணக்கியல் தரவுகள், முறைகேடுகள் என்றழைக்கப்பட்டன. இதனால் சிக்கியவர்களில் பலர் நியாயமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, பணி நீக்கம், அபதானம், சமூகஅவமதிப்பு போன்றவற்றை அனுபவிக்க நேர்ந்தது.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி வின் வில்லியம்ஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், குற்றமற்ற பலரும் தவறான வழக்குகளால் மனவேதனை அடைந்துள்ளதாகவும், அந்த மனவேதனையால் குறைந்தது 13 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் பிரிட்டன் முழுக்கவே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
தபால் துறையின் சீரற்ற நிர்வாகமும், கணினி தொழில்நுட்பத்தின் பிழையும், ஏராளமான உயிர்களுக்கு நேர்ந்த இழப்புக்கு காரணமாக உள்ள நிலையில், இது தொடர்பான முழுமையான நீதிமன்ற நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கான அழுத்தம் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏற்பட்டு வருகிறது.