கொழும்பு: இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது.
இதில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க 55.89 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு சட்டத்தையும் இயற்றுவது கடினமாக இருந்ததால், திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மறுநாளே பாராளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார்.
புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்தி 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதையடுத்து நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.
உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 60%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர்கள் 61.73 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 3-ல் ஆளும் கட்சி முன்னிலை வகிக்கிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில், இலங்கைத் தமிழரசுக் கட்சி இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 196 பேர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தபட்சம் 113 இடங்கள் தேவை. ஜனாதிபதியின் கட்சி அல்லது அணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்றால், மசோதாக்களை நிறைவேற்ற முடியாது. எனவே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெறுவது அவசியமாகும்.