நியூயார்க்: முதலில் காசா போரை நிறுத்துங்கள்… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் உடனடியாக காசா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேக்ரான், இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து பாலஸ்தீனப் போரை நிறுத்தக் கூடிய ஒரே தலைவர் டிரம்ப்தான் எனக் கூறியுள்ளார்.
“காசாவில் போரை நிறுத்துவதற்கான பொறுப்பு, அதிகாரம், சக்தி அனைத்தும் டிரம்பின் கைகளில் உள்ளது. ஏனெனில் காசாவில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அமெரிக்கா தான் வழங்குகிறது. பிரான்ஸ் அப்படிச் செய்வதில்லை. அதனால் அவர் நம்மை விட அதிகமாகச் செய்யக்கூடிய நிலைமையில் உள்ளார். போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அமைதி பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்க வேண்டும்,” என்று மேக்ரான் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் டிரம்ப் நிகழ்த்திய உரைக்கு பாராட்டு தெரிவித்த மேக்ரான் “இன்று காலை மேடையில் அவர் மீண்டும் கூறினார் – ‘எனக்கு அமைதி வேண்டும், ஏழு மோதல்களைத் தீர்த்துவிட்டேன்’ என்று. நான் அமைதிக்காக பாடுபடும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியைப் பார்த்தேன். அவர் உண்மையிலேயே நோபல் பரிசை விரும்பினால், இந்த மோதலை நிறுத்தியால்தான் அது சாத்தியம்,” என்று மேக்ரான் குறிப்பிட்டார்.
கம்போடியா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகள், சமீபத்தில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களை காரணம் காட்டி, டிரம்பை ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்துள்ளன.
வெள்ளை மாளிகை தரப்பும் டிரம்பின் பங்களிப்பை வலியுறுத்தி வருகிறது. முன்னாள் நான்கு அதிபர்களைப் போலவே தாமும் பாராட்டுக்குரியவர் என்று டிரம்ப் கூறியதோடு,“ஐக்கிய நாடுகள் சபை செய்ததை விட ஜனாதிபதி டிரம்ப் அமைதிக்காக அதிகம் செய்துள்ளார். உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு வழிவகுப்பது இவரால் மட்டுமே சாத்தியமானது. ஏனெனில் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்கியவர் இவரே,” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்தார்.
உலக அரசியலில் தன்னைத்தான் ‘அமைதிக்கான தூதர்’ என்று காட்டிக் கொள்ள முயலும் டிரம்புக்கு, காசா போரை நிறுத்தும் சவாலை முன்வைத்திருக்கிறார் மேக்ரான். இது நோபல் பரிசுக்கான அவரது தகுதி குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.