நைரோபி: நைரோபி விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை சுமார் ரூ.15,000 கோடிக்கு நிர்வகிக்க அதானி குழுமத்துக்கு 30 ஆண்டு ஒப்பந்தம் வழங்க கென்யா அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும், வெளிநாட்டினர் அதிகளவில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பலமுறை அறிவித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் கென்ய அரசு பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நடைபெறாமல் பார்த்துக் கொண்டது.
ஆனால் இன்று ஜோமோ சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதானி வெளியேறு கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது.
பல விமானங்கள் தாமதமாகி, பல ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.