மென்லோ பார்க்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். தொழில்நுட்ப உலகின் ராஜா என்று கூகுளை சொல்லலாம். அதன் பயன்பாடு ஸ்மார்ட்போன் இயங்குதளத்திலிருந்து மின்னஞ்சல், தேடுபொறிகள் மற்றும் வரைபடங்கள் வரை நீண்டுள்ளது.
இப்போது கூகுள் AI தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்துகிறது. இந்நிலையில் சுந்தர் பிச்சை தான் பங்கேற்ற நேர்காணலில் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது குறித்து விவரித்துள்ளார்.ஒரு ஊழியராக தனது அனுபவத்தில் இருந்து இதை பகிர்ந்துள்ளார்.
“நான் உணவகத்தில் பல சக ஊழியர்களை சந்தித்திருக்கிறேன். அப்படி கலந்து பேசும்போது பல சுவாரசியமான ஐடியாக்கள் கிடைக்கும். இது எங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும். இது ஊழியர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது.
தவிர, பணிச்சூழலும் உற்சாகமாக உள்ளது,” என்றார். உலகம் முழுவதும் கூகுளில் சுமார் 1.82 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூகுள் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, வீட்டிலிருந்து பணிபுரியும் விருப்பங்கள் மற்றும் உடல்நலக் காப்பீட்டை வழங்குகிறது.
பணியாளர் நலக் கொள்கைகளை மேம்படுத்துவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் அறியப்படுகிறது. சமீபத்தில், சுந்தர் பிச்சை, புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளவர்களுக்கு கூகுள் வேலைவாய்ப்பை வழங்குகிறது என்று கூறியிருந்தார்.