காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் பகுதிகளில் ஜன்னல்களை வைக்க அந்நாட்டு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. ஏற்கனவே உள்ள ஜன்னல்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது.
அதன் பின், தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதே சமயம் தங்களின் ஆட்சி முந்தைய முறை போல் இருக்காது என்றும் அவர்களே அப்போது கூறியிருந்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தனர். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் அந்த அறிவிப்புக்கு முரணானதாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், “சமையலறை, முற்றத்தில், கிணற்றில் தண்ணீர் சேகரிக்கும் பெண்களைப் பார்ப்பது குற்றம். எனவே, நாட்டில் புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டுக் கிணறு போன்ற பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக் கூடாது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில், மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் சுவர் எழுப்பியோ அல்லது தடுக்கப்பட்டோ இருக்க வேண்டும்.
இதை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இதை செய்யலாம்,” என்றார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு கல்வி, வேலை, பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெண்கள் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்களும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.