வாஷிங்டன்:அமெரிக்காவில், டொனால்டு டிரம்பின் ஓட்டல் முன், டெஸ்லா சைபர்ட்ரக் கார் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நெவாடாவின் லாஸ் வேகாஸில், டொனால்ட் டிரம்பின் ஹோட்டல் முன் டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்தது. இந்த தீ விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் காயம் அடைந்தனர். ஹோட்டல் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா சைபர்ட்ரக் கார் திடீரென வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் சந்தேகிக்கிறார். டெஸ்லாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் அதிவேக டிரக் ஒன்று கூட்டத்தின் மீது மோதியதில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் என தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து பதில் அளித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், “வன்முறையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நமது நாட்டில் குற்றச்செயல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது” என்றார்.