பாங்காக்: கம்போடியா மீது தாய்லாந்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர். இதில் கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த போரில் 48 பேர் உயிரிழந்தனர். இரு நாட்டு எல்லையில் இருந்தும் சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த போரின்போது எல்லையில் கண்ணிவெடிகள் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டன.
5 நாட்கள் நடந்த போர் பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், கம்போடியா மீது தாய்லாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.