வாஷிங்டன்: தாய்லாந்தும் கம்போடியாவும் இடையே மூன்று நாட்களாக நடைபெற்ற எல்லை மோதல்களில் ஏற்பட்ட மனித இழப்புகள் மற்றும் இடம்பெயர்வுகள், சர்வதேச கவலையை ஏற்படுத்தியிருந்தன. இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளையும் உடனடியாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவந்ததாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, எந்த சிறிய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டாலும் அதை தன் முயற்சியாக விளம்பரம் செய்வது டிரம்பின் வழக்கமான நடைமுறையாகவே இருந்து வருகிறது. இதேபோல், இஸ்ரேல்-ஈரான் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வந்தேன் என அவர் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருந்தார்.

தற்போது, தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஏற்பட்ட பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தானும் பங்கு பெற்றதாக டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் இரு தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசியதாகவும், தொடர்ந்து சண்டையிடுவதால் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோதல்களில் 30க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 1,30,000க்கும் மேற்பட்டோரது இடம்பெயர்வு ஆகியவை பெரும் அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், டிரம்பின் முயற்சியால் தற்காலிக அமைதி நிலவலாம் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இது சர்வதேச அமைப்புகளின் அழுத்தத்தையும் பிரதிபலிக்கிறது.