இலங்கையில் அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தீவிர பரப்புரை முடிவுக்கு வந்தது. 2022 இல், இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சி காரணமாக ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ஷ விலகினார்.
இதையடுத்து இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது.அதற்கு முன்னதாக புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ உட்பட 38 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு 48 மணிநேரம் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய கிளர்ச்சியின் பின்னர் இலங்கையில் அதிபர் தேர்தலில் 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.