காசாவில் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அங்குள்ள பதற்றம் இன்னும் தொடர்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசா பகுதியில் போர் முடிவடையாது” என தெரிவித்துள்ளார். இது, தற்போதைய அமைதி பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் உருவான அமைதி திட்டத்தின் அடிப்படையில் காசாவில் இடைக்கால போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ஹமாஸ் மற்றும் எதிர்ப்பு அமைப்புகள் இடையே சிறு அளவில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் மனிதாபிமான நெருக்கடி நிலவுகிறது.
அமெரிக்கா சமீபத்தில் ஹமாஸ் பாலஸ்தீன மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரித்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாக அமெரிக்கா தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, டிரம்ப், “காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நெதன்யாகு தெரிவித்ததாவது: “இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தின் நோக்கம் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பது. அது நிறைவேறிய பிறகே உண்மையான அமைதி சாத்தியம். ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் வரை இஸ்ரேல் தனது நடவடிக்கையை நிறுத்தாது.” தற்போது ஹமாஸ் 20 பிணையாளிகளை விடுவித்துள்ளது, அதேவேளையில் இஸ்ரேல் 2,000 பாலஸ்தீன கைதிகளையும் 135 உடல்களையும் திருப்பி அனுப்பியுள்ளது எனவும் கூறினார்.