கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று தெரியும். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வந்த பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பதவியேற்றார். அவரது NPP கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனையடுத்து, தேர்தலை நடத்தி பெரும்பான்மையைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி திஸாநாயக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதிய பார்லிமென்டை தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர், 14-ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. இலங்கையில், 225 உறுப்பினர்களை கொண்ட பார்லிமென்டில், 196 எம்.பி.,க்கள், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்தது. 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் முடிவுகள் இன்று தெரியும்.