ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ எனும் அமைப்பு பொறுப்பேற்றதை தொடர்ந்து, அதை எதிர்க்கும் நடவடிக்கையாக அமெரிக்க அரசு கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் என்றும், துயருறும் மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, தற்போது ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பை உலகளாவிய பயங்கரவாதிகளின் பட்டியலிலும் சேர்த்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இது ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கனவே பயங்கரவாத குழுவாக வகைப்படுத்தப்பட்ட, பாகிஸ்தான் தளமாக செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பின் சொத்துகள் மற்றும் நிதி ஆதாரங்கள் அமெரிக்க மண்ணில் முடக்கப்படும். அதன் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும், அந்த அமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்கத் தேவையான ஆதாரங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த முக்கிய நடவடிக்கையின் மூலம், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா–அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுகிறது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்புகளின் முகாமுகளைக் குறிவைக்கும் இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.