சமீபத்திய ஆண்டுகளில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வை காண்கிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அமெரிக்க வரிகள் போன்ற காரணங்கள் இந்த உயர்விற்கு காரணமாகின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசு 2025 அக்டோபர் 1-ஆம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு அதிகாரப்பூர்வமாக முடங்கியது. செனட் தற்காலிக நிதியுதவி மசோதாவை அங்கீகரிக்க தவறியதால் இது நிகழ்ந்தது.

அரசாங்கம் முடங்கியதால் அவசியமற்ற சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன; விமானப் பயணம் தடைசெய்யப்படலாம், முக்கிய பொருளாதார அறிக்கைகள் தாமதப்படலாம் மற்றும் சிறிய வணிக அலுவலகங்கள் மூடப்படலாம். அரசு ஊழியர்கள் ஊதியமில்லாத விடுப்பு பெற்றுள்ளனர்.
இந்த நிலைமை தங்கத்தின் விலை உயர்விற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்திற்கு தேவை அதிகரித்து, அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 0.2% உயர்ந்து $3,842.76 ஆக இருந்தது. செப்டம்பர் மாதம் இதுவரை தங்கம் 11.4% அதிகரித்து, 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 50% உயர்ந்துள்ளது; கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 112% உயர்வு பெற்றுள்ளது. கடந்த கால விலை மாற்றங்கள், கோவிட்-19 பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவை விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள். நிபுணர்கள், வரும் 1-5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என கணிக்கின்றனர்.