டெல்லி: அமெரிக்காவின் சதியால் தான் ஆட்சியை இழந்தேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பங்களாதேஷில் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
இது கலவரமாக மாறியதால், கடந்த 5ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்டின் தீவுகளை ஒப்படைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அந்தத் தீவை அமெரிக்காவுக்குக் கொடுத்திருந்தால் நான் ஆட்சியில் இருந்திருப்பேன்.
ஆனால் நான் வங்கதேசத்தின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தேன். இப்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன். நான் கூறியதை திரித்து சிலர் மாணவர் போராட்டத்தை தூண்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பரிதாபமாக இறப்பதை நான் விரும்பவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
வங்கதேச மக்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக விரோதிகளிடம் ஏமாற வேண்டாம். அவர்களுக்கு எதிராக நில்லுங்கள். அவாமி லீக் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் கவலையளிக்கின்றன. எனது தந்தையும் (முஜிபுர் ரஹ்மான்) குடும்பத்தினரும் நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தனர். வங்கதேசம் மற்றும் அதன் மக்களுக்காக நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். கடவுளின் கிருபையால் நான் மீண்டும் பங்களாதேஷுக்கு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.