ஜெனிவா: ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் கூறி, கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் 2.95 பில்லியன் யூரோ (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. கூகுள் தனது சொந்த தயாரிப்புகளுக்கு சாதகமான முறையில் விளம்பரங்களை முன்னிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள தொழில்துறை போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. அபராதம் நியாயமற்றது, மேலும் இது ஐரோப்பாவில் உள்ள ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவைகளை வழங்குவது போட்டிக்கு எதிரானது அல்ல, மாறாக அதிக மாற்று வழிகள் உள்ளன என்றும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நியாயமற்றது, அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு என்று அவர் குற்றஞ்சாட்டினார். ஐரோப்பிய யூனியன் தனது நடைமுறையை மாற்றாவிட்டால், அமெரிக்கா நேரடியாக வரி விதிப்புகளை அமல்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய யூனியன் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வரும் போக்கை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கூகுளுக்கு இது மூன்றாவது பெரிய அபராதமாகும். 2016-ல் 2.4 பில்லியன் யூரோவும், 2018-ல் 4.34 பில்லியன் யூரோவும் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது விதிக்கப்பட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகும். விதிகளை மீறுவது தொடர்ந்தால், கூகுள் தனது விளம்பர தொழில்நுட்ப வணிகத்தின் சில பகுதிகளை விற்க வேண்டிய நிலை ஏற்படும் என ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.