உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போர் தொடர்ந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய அழுத்தம் கொடுத்து வருகிறார். குறிப்பாக சீனாவை குறிவைத்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். சீனாவும் இந்தியாவும் ரஷ்யா எண்ணெய் கொள்முதல் செய்வதால் போரை நீடிக்க உதவுகின்றன என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.

இந்த நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, டிரம்ப் பேச்சுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். “போர் என்பது ஒருபோதும் தீர்வாக இருக்காது. தடைகள் விதிப்பதும் பிரச்சனையை சிக்கலாக்கும். சீனா எந்தப் போரிலும் பங்கேற்கவில்லை, சதிகளிலும் ஈடுபடவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவே உலக நாடுகளில் போர்களைத் தூண்டிவருகிறது என்பதை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப், நேட்டோ நாடுகளின் எண்ணெய் கொள்முதல் முறையையும் குற்றம் சாட்டி, ரஷ்யா பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். நேட்டோவில் உள்ள 32 நாடுகள் ஒருமித்து சீனாவுக்கு எதிராக வரி விதித்தால் மட்டுமே ரஷ்யா போரை நிறுத்தும் என அவர் நம்புகிறார். ஆனால் இதுவரை நேட்டோ நாடுகள் டிரம்ப் கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்நிலையில், சீனா தனது பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான இந்த முரண்பாடு உலக வர்த்தக சந்தைகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.