வாஷிங்டன்: “ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். உலகமே இந்தப் போரால் சோர்வடைந்துவிட்டது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, டிரம்ப் சமீபத்தில் அலாஸ்கா நகரில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். அந்தச் சந்திப்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போரைக் குறித்த நல்ல முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் அதை நிறுத்தப் போகிறோம். நான் ஏற்கனவே 6 போர்களை முடித்திருக்கிறேன். இந்தப் போரும் முடிவடையும்” என்று கூறினார்.
மேலும், “இது எளிதானது அல்ல. ஆனால் நம்பிக்கையுடன் சொல்கிறேன், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவோம். உலகம் அமைதிக்காக காத்திருக்கிறது” என டிரம்ப் வலியுறுத்தினார்.