சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் கடல் உணவு ஏற்றுமதிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள 15 நிறுவனங்கள் உட்பட மொத்தம் 25 ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளன.

ஏற்கனவே கடல் உணவுகள் ஏற்றுமதிக்கு 2.65 சதவீத Anti Dumping Duty, 5.77 சதவீத Countervailing Duty இருந்தது. இப்போது அதனுடன் 50 சதவீத டிரம்பின் புதிய வரியும் சேர்க்கப்பட்டதால், மொத்த வரி சுமார் 58.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா செல்லும் இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன், நண்டு போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கிறது. விலை உயர்வால் அமெரிக்காவில் உள்ள மக்கள் வாங்கத் தயங்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் பல நிறுவனங்கள் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளன. தூத்துக்குடி மட்டுமல்லாமல் 13 கடலோர மாவட்டங்களின் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து வாங்கப்படும் கடல் உணவுகள் ஏற்றுமதி குறைந்ததால், அவர்களது வருமானமும் சரிந்து வருகிறது.
தனியார் ஏற்றுமதி நிறுவனங்களின் தகவலின்படி, வழக்கமாக மாதத்துக்கு 50 கன்டெய்னர்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் 20 கன்டெய்னர்கள் அமெரிக்காவுக்கு செல்வன. ஆனால் தற்போது சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. வண்ணமி இறால் போன்ற முக்கிய ஏற்றுமதி பொருட்கள் அதிக அளவில் அமெரிக்கா சென்ற நிலையில், புதிய வரி விதிப்பு இந்த சந்தையை முற்றிலும் சிதறடித்துள்ளது.
டிரம்பின் வர்த்தக போர் காரணமாக, தமிழ்நாட்டின் கடல் உணவு தொழில்கள் மட்டுமல்ல, ஜவுளி, நகை, தோல் சார்ந்த துறைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் தமிழக ஏற்றுமதியாளர்கள் வரி சுமையை குறைக்க இந்திய அரசு தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.