வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அக்டோபர் 1 முதல் அமலில் வரும் புதிய இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளார். இதில் மருந்துகளுக்கு 100% வரி, சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50% வரி, பர்னிச்சருக்கு 30% வரி, கனரக லாரிகளுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, குறிப்பாக இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா, மலிவு விலை ஜெனரிக் மருந்துகளுக்கான மிகப்பெரிய சந்தை என்பதால், ஏற்றுமதி வருவாய் குறையும் அபாயம் அதிகம். 2024ஆம் ஆண்டில் இந்தியா $3.6 பில்லியன் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. 2025ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் $3.7 பில்லியன் மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், “அமெரிக்காவில் உற்பத்தி ஆலை அமைக்காத எந்த நிறுவனம் மருந்துகளை ஏற்றுமதி செய்ய விரும்பினாலும், 100% வரி கட்டவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். உற்பத்தி ஆலை அமைத்தால், அந்த மருந்துகளுக்கு வரி விதிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் கூட அதிக செலவு சுமையைச் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியா இதனை ஒரு சவாலாகவும், அதே சமயம் புதிய சந்தைகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் சந்தர்ப்பமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.