வாஷிங்டன்: காசா மோதலில் பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் இரண்டாண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இதுவரை 65,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பலமுறை டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

தற்போது ஹமாஸ் அமைப்பு 48 பணயக்கைதிகளை சிறைபிடித்து வைத்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “இது கடைசி எச்சரிக்கை. இனி எச்சரிக்கை இருக்காது. பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். போர் நிறுத்தம் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னர், ஹமாஸ் தரப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான அறிவிப்பு. கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.