வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்து விடும்” என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், “எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரியதாக உயர்ந்தது. ஆனால் ஜோ பைடன் நிர்வாகத்தின் தவறான செயல்களால் அது சீரழியத் தொடங்கியது” என்றார்.

மேலும் அவர், “வரிகளால் தான் அமெரிக்காவின் நிதி வலுவாகிறது. நமக்கு தேவையான அனைத்தையும் வரி மூலம் பெறுகிறோம். வரிகள் இல்லையென்றால் உலகம் இயங்காது. அமெரிக்கா இல்லாத நிலை உருவானால், உலகமே அழிவை சந்திக்கும்” என்று கூறினார்.
முன்னதாக அளித்த பேட்டியிலும், “சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் வரிகளால் நம்மை சுரண்டுகின்றன. ஆனால் உலகில் யாரையும் விட வரியை நன்கு புரிந்து கொண்டவன் நான் தான். இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு. இப்போது அவர்கள் சலுகை அளிக்கவில்லை என்றால், நாமும் வரியை குறைப்பதில்லை” என்று வலியுறுத்தினார்.
டிரம்பின் இந்த கூற்றுகள், சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.