மாஸ்கோ: “இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்கும் கூடுதல் வரிகள், எதிர்பார்த்த பலனை தராது. மாறாக, அது உலகளாவிய பணவீக்கத்தையும், அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவை உருவாக்கும்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

சோச்சியில் நடைபெற்ற நிபுணர்கள் சந்திப்பில் புடின் பேசியபோது, “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதித்தால், உலகளாவிய அளவில் பொருட்களின் விலை அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை குறிவைத்து எடுக்கப்படும் டிரம்பின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியையே சந்திக்கும். மேற்கத்திய நாடுகள் தடை விதித்தாலும், ரஷ்யா தனது பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியா ஒருபோதும் தன்னை அவமதிக்க அனுமதிக்காது. பிரதமர் மோடி எங்களின் நண்பர். ரஷ்யா–இந்தியா உறவில் எந்தவித பதட்டமும் இல்லை. எங்கள் வெளியுறவு அமைச்சகங்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன” எனவும் கூறினார்.
அதேசமயம், அமெரிக்கா உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் நடவடிக்கை, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். “போர்க்களத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு எந்த சூழ்நிலையிலும் மாறாது” என்று புடின் வலியுறுத்தினார்.