கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமாகி வரும் நிலையில், “எங்கள் நிலத்தை ரஷ்யாவுக்கு ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; மேலும் ரஷ்யாவிடம் சரணடையும் கோரிக்கையையும் ஏற்க மாட்டோம்” என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மிகப்பெரிய தள்ளுபடியில் வழங்கி வர்த்தக லாபம் பெறுகிறது. ஆனால் அந்த நிதியை சமூக நலத்திற்குப் பயன்படுத்தாமல், போருக்கே செலவிடுகிறது என தூதர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் அழுத்தத்தால், இந்தியா ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்திருப்பது, ரஷ்யாவின் எதிர்கால நிதியியல் திட்டங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போருக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியில் இந்தியா வகிக்கும் பங்கு மற்றும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்தார். இந்திய அரசின் உறுதியான ஆதரவு, உக்ரைன் எதிர்பார்த்த ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்திய பயணம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தூதர் கூறினார்.
இவ்வாறு, ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு, சர்வதேச சமநிலைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உக்ரைன், தனது நிலத்தை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காது என்று மீண்டும் உறுதி தெரிவித்துள்ளார்.