வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அதில் ஒன்று வரிவிதிப்பு. எனினும், பரஸ்பர வரி விதிப்பு வரும் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவு சர்வதேச வர்த்தகப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்டனர். வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், “ஒரு சிறந்த பிரதமரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் எனது நண்பர். பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது மோசமானது” என்றார்.

அதே சமயம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை சிறப்பாக செயல்படும் என்றார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற சில நாட்களிலேயே பிரதமர் மோடி டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.