வாஷிங்டன் நகரில் ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இந்தியாவுக்கு 25 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்காக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜி-7 நாடுகளின் ஒத்துழைப்பையும் அமெரிக்க அதிபர் கோரினார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அமெரிக்கா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்காக ரஷ்யாவை பொருளாதார ரீதியாக சுருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம். இதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
கனடாவின் நிதியமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் ஷாம்பெயின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வரி விதிப்பதற்கான பல்வேறு வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேசமயம் உக்ரைனுக்கு பாதுகாப்பு அளிக்க எடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் கூட்டம் வலியுறுத்தியது.
ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், இந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.