நியூயார்க்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) மற்றும் அதன் மஜீத் படை பிரிவுக்கு ஐ.நா., தடை விதிக்க சீனா–பாகிஸ்தான் இணைந்து முயன்றன. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை இந்த முயற்சியை தடுத்து நிறுத்தின. இதன் மூலம் பாகிஸ்தானின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த பயங்கரவாத அமைப்புகள் சமீபத்தில் அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத குழுவாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஐ.நா., தடைப்பட்ட குழுக்களின் பட்டியலில் சேர்க்க போதிய சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்று அமெரிக்கா வலியுறுத்தியது. குறிப்பாக, அல் குவைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல். உடன் நேரடி தொடர்பு உள்ள அமைப்புகளுக்கே அந்த தடை பொருந்தும் எனவும் தெரிவித்தது.
இதனை, அமெரிக்காவின் ராஜதந்திர பதிலடியாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஏனெனில், இந்தியா–அமெரிக்கா இணைந்து லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர்களுக்கு தடை விதிக்க முயன்றபோது, சீனா தொடர்ந்து அதை தடுத்தது. அதே யுத்தியை இப்போது அமெரிக்கா பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகள் ஐ.நா., மேடையில் சிக்கி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அரசியலில் அமெரிக்கா–சீனா போட்டியின் புதிய வெளிப்பாடாக இது பார்க்கப்படுகிறது.