மாஸ்கோ: இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்து வரும் வரி அச்சுறுத்தல்கள் எந்தவித பயனும் அளிக்காது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சீனாவும் இந்தியாவும் பண்டைய நாகரிகங்களை கொண்ட வலுவான நாடுகள். “எனக்கு பிடிக்காததை நிறுத்துங்கள், இல்லையெனில் அதிக வரி விதிப்பேன்” என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைகள் பலனளிக்காது என்பது காலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலன்களை முன்னிறுத்தியே கொள்கைகளை பின்பற்றி வருகின்றன.

அமெரிக்காவின் அழுத்தம் பொருளாதார சிரமங்களை ஏற்படுத்தினாலும், அது இந்தியா மற்றும் சீனாவை புதிய சந்தைகள் மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை தேட கட்டாயப்படுத்துகிறது. இதனால் அதிக விலைகள் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, இத்தகைய அழுத்தத்திற்கு தார்மீக, அரசியல் ரீதியாக கடுமையான எதிர்ப்பும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ரஷ்யாவிற்கு எதிராகவும் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் இல்லாத அளவிற்கு தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த அனுபவத்திலிருந்து ரஷ்யா தனது முடிவுகளை எடுத்து வந்ததாகவும், மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் தங்களைத் தடுக்க முடியாது எனவும் லாவ்ரோவ் வலியுறுத்தினார்.