வாஷிங்டன்: அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை டிரம்ப் கடுமையாக எதிர்த்து, “அனைத்து வரிகளும் இன்னும் அமலில் உள்ளன. அவற்றை நீக்கினால் அமெரிக்கா நிதி ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டு, பேரழிவை சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே, டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரிகள் விதித்தார். குறிப்பாக, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதித்திருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் கடுமையான சிக்கலில் சிக்கியுள்ளன.
“பல ஆண்டுகளாக நமது அரசியல்வாதிகள் கவனக்குறைவாக இருந்ததால், வெளிநாடுகள் நம்மீது அநியாயமான வரிகள் மற்றும் வர்த்தக தடைகளை விதித்தன. இனி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன், இந்த வரிவிதிப்புகளை நமது தேச நலனுக்காக பயன்படுத்துவோம். இது தொழிலாளர்கள், விவசாயிகள், உற்பத்தியாளர்களை பாதுகாக்கும்” என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், “வரிவிதிப்பு தான் நமது உற்பத்தி நிறுவனங்களுக்கு வலு சேர்க்கும். அது இல்லாமல் போனால், அமெரிக்க பொருளாதாரம் சிதைந்துவிடும். நான் அமெரிக்காவை மீண்டும் வலுவான நாடாக மாற்றுவேன்” என அவர் தெரிவித்தார். டிரம்பின் இந்தக் கருத்து, உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.