மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள கிராஷெனின்னிகோவ் எனப்படும் எரிமலை, சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீற்றம் கொண்டு வெடிக்கத் தொடங்கியுள்ளது. இது அப்பகுதி மக்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்காலக்கட்டத்தில், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பாக, கம்சட்காவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கம் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, கிராஷெனின்னிகோவ் எரிமலை வெடித்து, சாம்பலும் புகையும் அடர்ந்த மாசாக ஆகாயத்தில் சுமார் 6 கி.மீ. உயரம் வரை எழுந்தது.
இது போன்ற வெடிப்புகள் கடைசியாக 15ம் நூற்றாண்டில் தான் பதிவாகியிருந்தன. அதன்பின், நூற்றாண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, தற்போது இயற்கையின் வலிமையை நினைவூட்டும் வகையில் சீற்றம் கொள்கிறது.
அதிகாரிகள் மற்றும் காலநிலை ஆய்வாளர்கள் இது சாதாரண நிகழ்வல்ல என்றும், நிலநடுக்கங்களால் பூமியின் உள் சலனங்கள் தீவிரமாகியிருப்பதால், அருகிலுள்ள மற்ற எரிமலைகளும் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்புக்காக நெருக்கமான பகுதிகளில் வாழும் மக்கள் இடம்பெயர்த்தனர்.
இந்த இயற்கை நிகழ்வுகள், பூமியின் அடிப்படை சக்திகள் எவ்வளவு அழுத்தமானவை என்பதை உணர்த்துகின்றன. இதேசமயம், மனிதர்கள் இயற்கையின் முன்னிலையில் எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறோம் என்பதையும் இவ்வெடிப்பு வெளிப்படையாக காட்டுகிறது.