வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் இறுதிகட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸில் ஆரம்ப வாக்களிப்பு வாரங்களுக்கு முன்பே தொடங்குகிறது, அங்கு வாக்காளர்கள் தேர்தல் நாளுக்கு முன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.
6 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவின் கடைசி நாளான நேற்று ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அமெரிக்காவில் நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு இரவுடன் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கைக்கான வாக்குச் சீட்டுகளை அடுக்கி வைக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா முழுவதும் தேர்தல் பரபரப்பு நிலவுவதால் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் அதிக அளவில் கூடும் என்பதால், வெள்ளை மாளிகை வளாகத்தைச் சுற்றிலும் தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய வாக்காளர் பதிவுகளில் முறைகேடுகள் நடந்ததாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியதை அடுத்து, குழப்பத்தைத் தடுக்க அமெரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.