பிரேசிலியா: பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர சதி செய்த குற்றத்திற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசிலின் லிபரல் கட்சியின் உறுப்பினரான ஜெய்ர் போல்சனாரோ, 2019 முதல் 2022 வரை நாட்டின் அதிபராக இருந்தார்.
வலதுசாரிக் கட்சித் தலைவரான அவர், 2022-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், மீண்டும் ஆட்சிக்கு வர சதி செய்ததாக ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.

ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் ஜெய்ர் போல்சனாரோவை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளனர். ஐந்தாவது நீதிபதியின் தீர்ப்பிற்குப் பிறகு தண்டனை இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான மற்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தண்டனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள 70 வயதான ஜெய்ர் போல்சனாரோ, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஜெய்ர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும், அவர் மிகவும் நல்ல மனிதர் என்றும் கூறினார். விசாரணையை ‘சூனிய வேட்டை’ என்றும் விமர்சித்தார்.