
மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே உள்ள முக்கியமான எல்லைச் சுங்கச்சாவடியான உட்லண்ட்ஸ் செக் பாயிண்ட்டை விரிவுபடுத்தும் திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக இடையில் உள்ள 0.79 ஹெக்டர் நிலத்தை சிங்கப்பூர், மலேசியாவிடம் இருந்து கையகப்படுத்த இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த செக் பாயிண்ட் வழியாக தினசரி 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள். கடந்த ஆண்டு கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் இது 22% அதிகமாக உள்ளது. பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு முக்கியமான நுழைவாயிலாக இது செயல்படுகிறது. 70களில் கட்டப்பட்ட இந்தக் கட்டமைப்பு 90களில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது அது மிகப்பெரிய போக்குவரத்து அழுத்தத்தைக் கடந்து வருகிறது.
இந்த சுங்கச்சாவடியை சிங்கப்பூர் இம்மிகிரேஷன் மற்றும் செக் பாயிண்ட் ஆணையம் நிர்வகிக்கிறது. அதிக பயணிகள் மற்றும் வாகன நெரிசல் காரணமாக சோதனை நேரம் அதிகமாகிறது. பீக் நேரங்களில் இது பெரும் கால தாமதத்தையும் உண்டாக்குகிறது. இந்த பிரச்சனையை தீர்க்கத்தான் இப்போது முழுமையான விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்தின்படி, கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கோ வாகனங்களுக்கு தானாகவே கிளியரன்ஸ் வழங்கும் டிஜிட்டல் வசதிகள் உருவாக்கப்படும். கூடுதல் வழித்தடங்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் பரிசோதனை வசதிகளும் உருவாக்கப்படும். முதற்கட்ட பணிகள் 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கும்.
இம்மிகிரேஷன் கிளியரன்ஸ் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் விரைவாக நடைபெறும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். பீக் நேரங்களில் சோதனை நேரம் 60 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்ட பணிகள் 2028ஆம் ஆண்டில் முடியும். இரண்டாம் கட்ட பணிகள் 2032-ஆம் ஆண்டில் நிறைவு பெறும். 2040 ஆம் ஆண்டுக்குள் முழுமையான செக் பாயிண்ட் கட்டமைப்பு புதிய தோற்றத்தில் செயல்பட தொடங்கும். இந்த திட்டம், பயணச் சீர்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.